Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

விகடன்

புதிய டிஜிட்டல் கொள்கையை மதிக்காத ட்விட்டர்... இந்தியரல்லாத ஒருவர் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமனம்!

இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கையின் படி சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் மூன்று பொறுப்புகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்காத ட்விட்டர், புதிய அதிகாரிகளை நியமிப்பதில் காலம் தாழ்த்தி வந்தது. இந்த மாதத் தொடக்கத்தில்தான் இந்தியாவிற்கான குறை தீர்ப்பு அதிகாரியாக தர்மேந்திர சத்ருவை நியமனம் செய்தது ட்விட்டர். ஆனால், சில நாள்களுக்கு முன்பு அவர் குறைதீர்ப்பு அதிகாரிக்கான பதவியில் இருந்து விலகியதாகத் தெரிகிறது. ட்விட்டர் தளத்தில் அந்த அதிகாரியின் பெயர் நீக்கப்பட்டிருந்தது தெரியவந்ததன் மூலம், அவர் பதவியில் இருந்து விலகியிருக்கலாம் எனத் தெரிகிறது.

New Grievance officer

அவரது பதவி விலகலைத் தொடர்ந்து இந்தியாவில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரிமி கெஸ்ஸல் என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ட்விட்டர் பக்கத்திலும் இந்தியாவின் குறைதீர்ப்பு அதிகாரியின் தகவல்களாக ஜெரிமி கெஸ்ஸலின் பெயர்தான் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கையின் படி, இந்தியாவைச் சேர்ந்த ஒருவர்தான் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தியாவைச் சேராத ஒருவர் தற்போது இந்தியாவின் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருப்பது ட்விட்டருக்கும் இந்திய அரசுக்குமான மோதலுக்கு மேலும் வலுசேர்க்கவே வழிவகுக்கும்.

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கி வைத்திருந்தது ட்விட்டர். அமெரிக்காவின் Digital Millennium Copyright Act-ன் கீழ் பதிப்புரிமை மீறல் தொடர்பாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது ட்விட்டர். இந்தியாவின் புதிய டிஜிட்டல் கொள்கையின் படி தன் கணக்கை முடக்குவதற்கு முன் எந்த விதமான முன்னறிவிப்பையும் ட்விட்டர் தனக்கு வழங்கவில்லை எனவும், தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படவே ட்விட்டர் விரும்புகிறது எனவும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ட்விட்டரின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கெனவே, ட்விட்டருக்கும், இந்திய அரசுக்கும் பல்வேறு விதங்களில் மோதல் இருந்து வருகிறது. புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதது, பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ராவின் ட்வீட்டை 'Manipulated Media' எனக் குறித்தது, பொய்யான தகவல்களைப் பரப்பும் கணக்குகள் மீது அரசு கேட்டும் நடவடிக்கை எடுக்காதது எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதனுடன் தற்போது இந்த பிரச்னைகளும் சேர்ந்துள்ளன. இதில் அரசுத் தரப்பு என்ன முடிவெடுக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



from விகடன்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib