அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதுப் பெண் சிரிஷா பண்ட்லா, நேற்று வெற்றிகரமாக விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு அடுத்தபடியாக இந்தியாவை பூர்விகமாகக்கொண்ட ஒரு பெண் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டிருப்பது இந்தியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ஜெஃப் பெஸோஸூடன் விண்ணுக்குச் செல்லும் 82 வயது வாலி ஃபங்க், யார் இவர்?
லண்டனில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் புகழ்பெற்ற தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனம், `விர்ஜின் கேலக்டிக்’. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த `விர்ஜின் கேலக்டிக் யூனிட்டி-22’ என்கிற விண்கலத்தில்தான் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் `விர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேர் அடங்கிய ஒரு குழு ஒன்று, நேற்று நியூ மெக்ஸிக்கோ ஏவுதளத்தில் இருந்து தனது விண்வெளிப்பயணத்தை தொடங்கியிருக்கிறது.
இக்குழுவில் சிரிஷாவும் அடக்கம். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்புதான் சிரிஷா `விர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தில் பணியில் சேர்ந்திருக்கிறார். பணியில் சேர்ந்த சில வருடங்களிலேயே இவருக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு இவரது கடின உழைப்புக்குக் கிடைத்த வெகுமதியாகப் பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் உள்ள குண்டூர், சிரிஷாவின் பூர்விகம். அங்கு அவருடைய உறவினர்கள் வசித்து வருகின்றனர். கேலக்டிக் விண்கலம் நேற்று வெற்றிகரமாகப் பயணத்தை ஆரம்பித்ததன் நேரடி ஒளிபரப்பை சிரிஷாவின் தாத்தா உட்பட உறவினர்கள் அனைவரும் குண்டூரில் இருந்தபடி கண்டு ரசித்திருக்கின்றனர்.
``யூனிட்டி-22 விண்கலம் வழியாக விண்வெளிக்குப் பயணம் செய்யவிருக்கும் குழுவில் நானும் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை எனக்கு அளிக்கிறது. இந்த பூமி எப்படி மனிதர்கள் அனைவருக்கும் சொந்தமோ அதேபோல விண்வெளியும் மனிதர்கள் அனைவருக்கும் சொந்தம் என்கிற இலக்குடன் செயல்படும். `விர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தின் இந்த முயற்சியில் என்னையும் இணைத்துக்கொண்டது பெருமையை அளிக்கிறது” என்று தனது விண்வெளிப்பயணம் குறித்து சில தினங்களுக்கு முன்பு சிரிஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
Join us July 11th for our first fully crewed rocket powered test flight, and the beginning of a new space age.
— Virgin Galactic (@virgingalactic) July 1, 2021
The countdown begins. #Unity22
https://t.co/5UalYT7Hjb. @RichardBranson pic.twitter.com/ZL9xbCeWQX
வணிக ரீதியிலான விண்கலங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ரிச்சர்ட் பிரான்சன் 17 வருடங்களுக்கு முன்பு இந்த `விர்ஜின் கேலக்டிக்’ நிறுவனத்தைத் தொடங்கினார். விண்வெளிக்கு விண்வெளி வீரர்கள் தொழில்ரீதியிலான பயணத்தை மேற்கொள்வதுதான் காலங்காலமாக மரபாக உள்ளது. ஆனால் இந்த மரபுகளை உடைத்து சாமானியர்களும் விண்வெளிக்குச் சுற்றுலா சென்றுவரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் ரிச்சர்ட் இதற்கு முன்னோட்டமாகவே இந்த விண்வெளிப்பயணத்தை தனது குழுவுடன் மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்


No comments:
Post a Comment