சமூக வலைதளங்கள் வளர வளர, அவற்றோடு சேர்த்து அவதூறு மற்றும் வன்மம் கலந்த பேச்சுகளும் (Hate speech) வளர்ந்து வந்திருக்கின்றன. அவதூறுப் பேச்சுகளைக் களைவதற்கு சமூக வலைதள நிறுவனங்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவதூறுப் பேச்சுகளுக்கு அதிகம் ஆளாவது பிரபலங்களும், பெண்களும்தான். தனக்குப் பிடிக்காத ஒரு நபரைப் பற்றியோ அல்லது பிரபலத்தைப் பற்றியோ அவதூறாக விமர்சிக்க நிறையப் பேர் தேர்ந்தெடுக்கும் ஒரு வழியாக சமூக வலைதளம் இருக்கிறது.
பேஸ்புக்கைத் தொடர்ந்து 1.2 பில்லியன் மாதாந்திர பயனர்களுடனும், இளம் வயதினரும் பிரபலங்களும் அதிகம் பயன்படுத்தும் தளமாகவும் இன்ஸ்டாகிராம் (Instagram) இருக்கிறது. கடந்த காலங்களில் பலமுறை அவதூறுப் பேச்சுகளைக் களைவதற்கான நிறைய புதிய வசதிகளை இன்ஸ்டாகிராம் வழங்கியிருக்கிறது. தற்போதும் அதே போல் அவதூறுப் பேச்சுகளுக்கு எதிரான புதிய அப்டேட்டோடு வந்திருக்கிறது இன்ஸ்டாகிராம்.
'Limit' என்ற புதிய வசதி கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதியில் இருந்து உலகம் முழுவதும் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தப் புதிய வசதியின் மூலம், நம்மைப் பின்தொடராத அல்லது சமீபத்தில் பின்தொடரத் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பயனாளர் யாராவது நம்முடைய பதிவுகளுக்கு கமெண்ட் செய்தாலோ அல்லது நமக்கு இன்ஸ்டாகிராம் குறுஞ்செய்தி அனுப்பினாலோ, இன்ஸ்டாகிாரம் தானாகவே நமக்குக் காட்டாமல் அதனை மறைத்துவிடும். இந்த வசதியை நமக்குத் தேவை என்றால் பயன்படுத்திக் கொள்ளலாம், வேண்டாம் என்றால் அதனை மாற்றியமைக்கும் வசதியையும் அளித்திருக்கிறது இன்ஸ்டாகிராம்.
இந்தப் புதிய வசதியை அறிமுகப்படுத்தியதற்கான காரணத்தையும் தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது இன்ஸ்டாகிராம். பிரபலங்களோ, தனிப்பட்ட நபர்களோ திடீரென வைரல் ஆகும் போது அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் பாராட்டவும் புதிய நபர்கள் அவர்களின் கணக்கில் இருக்கும் பதிவுகளுக்கு கமெண்ட செய்ய வருகிறார்கள். ஆனால், எதிர்மறையாக வைரல் ஆகும் போது, குறிப்பிட்ட பிரபலம் அல்லது தனிப்பட்ட நபர்களின் மீது வன்மத்தைக் காட்டவும் அவர்கள் தயங்குவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த யூரோ 2020 (Euro 2020) கால்பந்துக் கோப்பையைச் சுட்டிக்காட்டி இதைச் சொல்லியிருக்கிறது இன்ஸ்டாகிராம்.
Also Read: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?
கால்பந்து தொடரில் கலந்து கொண்ட பல வீரர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகளில் இனவெறி, நிறவெறி தொடர்பான பல அவதூறுக் கருத்துகளைப் பயனர்கள் பகிர்ந்திருக்கிறார்கள். யூரோ தொடர் மட்டுமல்லாது இது போன்ற பல சந்தர்ப்பங்களில் பிரபலங்கள் பலரும், சில நேரங்களில் தனிநபர்களும் இது போன்ற சமூக வலைதளத் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இப்படி திடீரென தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ய வருபவர்களின் அவதூறுக் கருத்துகளைத் தவிர்க்கவே இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்துவதாகவும் அதன் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளது இன்ஸ்டாகிராம். கடந்த காலங்களிலும் அவதூறுப் பேச்சுகளுக்கு எதிரான பல வசதிகளை வழங்கியிருக்கிறது இன்ஸ்டாகிராம். அவதூறுப் பேச்சுகளையும் கருத்துகளையும் தவிர்க்க இன்ஸ்டாகிராமின் பிரைவசி செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Profile - Settings - Privacy
அப்படியே அவதூறுக் கருத்துகளைப் பகிர்பவர்களும் அதைத் தவிர்க்கலாமே!
from விகடன்


No comments:
Post a Comment