புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு கடந்த பல மாதங்களாகவே இருந்த வந்தது. சில வாரங்களுக்கு முன்பு, புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கான காலக்கெடு முடிவுக்கு வந்ததையடுத்தும், அரசின் தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் ஃபேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தன. ஆனால், ட்விட்டர் மட்டும் புதிய டிஜிட்டல் கொள்கைககளை ஏற்றுக்கொள்வதாக கூறினாலும் முரண்டு பிடித்துக்கொண்டே இருந்தது. அதற்கான முன்னெடுப்புகள் எதையும் எடுக்காமலேயே இருந்து வருகிறது. புதிய டிஜிட்டல் கொள்கைகளின் படி குறிப்பிட்ட பொறுப்புகளில் (grievance officer, nodal officer and a chief compliance office) இந்திய அதிகாரிகள் மூன்று பேரை சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் நியமிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், ட்விட்டர் இன்னும் அதிகாரிகளை நியமித்தது தொடர்பான எந்தவொரு தகவலையும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்ளவில்லை. இதனால், இன்டர்மீடியரி ஸ்டேடஸை (Intermediary Status) தற்போது இழந்திருக்கிறது ட்விட்டர்.
There are numerous queries arising as to whether Twitter is entitled to safe harbour provision. However, the simple fact of the matter is that Twitter has failed to comply with the Intermediary Guidelines that came into effect from the 26th of May.
— Ravi Shankar Prasad (@rsprasad) June 16, 2021
அது என்ன இன்டர்மீடியரி ஸ்டேடஸ்?
அதாவது மக்கள் தங்கள் கருத்துகளை பகிரும் இடைநிலை சேவையாகவே இதற்கு முன்பு ட்விட்டர்கருதப்பட்டது. இதற்கு முன்பு அதில் பகிரப்படும் விஷயங்களுக்கு ட்விட்டர் நேரடியாக பொறுப்பாகாது. ஆனால், தற்போது இந்த ஸ்டேட்டஸை இழந்திருப்பதால் , இனி ட்விட்டரில் பதிவாகும் அனைத்துப் பதிவுகளுக்கும், அதன் கருத்துக்களுக்கும் ட்விட்டரும் பொறுப்பு. அதாவது, இனி நீங்கள் ட்விட்டரில் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டாலும், அதற்கும் ட்விட்டர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். அதோடு, அந்தக் கருத்துக்களுக்கு ட்விட்டர் மீது வழக்குப் பதியவும் முடியும். தகவல் தொழில்நுட்பச் சட்டம், பிரிவு 79-ன் கீழ், இதற்கு முன்னர் இது போன்ற மூன்றாம் நபரால் தங்கள் தளத்தில் பதியப்படும் கருத்துக்களுக்குச் சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. இதனைத் தான் இன்டர்மீடியரி ஸ்டேட்ஸ் என்று கூறுகின்றனர்.
Also Read: புதிய டிஜிட்டல் கொள்கை: ஏற்றுக் கொள்ளாத வாட்ஸ்அப்... மோதலில் ட்விட்டர்! என்ன நடக்கிறது?
உரிய அதிகாரிகளை நியமித்து விட்டதாகவும், அது குறித்த தகவல்களை விரைவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் தொடர்ந்து அரசின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படவே முயற்சிக்கிறோம் எனவும் ட்விட்டர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், ட்விட்டர் தரப்பில் இருந்து எந்த விதமான தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை எனத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. கடந்த ஜூன் 5 கடைசியாக ஒரு முறை புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுமாறு ட்விட்டருக்கு அரசுத் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. விரைவில் அரசுடன் இது குறித்து தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். ஆனால், இதுவரை ட்விட்டரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்று அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
ட்விட்டர் மீது முதல் FIR-ம் பதிவுசெய்யப்பட்டுவிட்டது..!
உத்தரப்பிரதேசத்தில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகச் செய்தி நிறுவனமான 'தி வயர்', பத்திரிகையாளர் ராணா ஆயுப் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 'Twitter Inc' மற்றும் 'Twitter Communications India PVT' ஆகியவற்றின் மீதும் வழக்குப் பதிந்திருக்கிறது உத்திர பிரதேசம், காசியாபாத் காவல்துறை. பொய்யான தகவல்களைப் பகிர்ந்ததற்காக மற்றவர்கள் மீதும், அந்த ட்வீட்டை நீக்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் ட்விட்டர் எடுக்கவில்லை என்பதற்காக ட்விட்டர் மீதும் வழக்குப் பதிந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததினாலேயே ட்விட்டர் மீதும் வழக்குப் பதிந்திருப்பதாகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
from விகடன்


No comments:
Post a Comment