லாக்டௌனில் முடங்கியிருக்கும் நெட்டிசன்கள் பால்ய கால நிகழ்வுகள் முதல் பாலிவுட் நடிகைகள்வரை தங்கள் கருத்துகளை கிளப்ஹவுஸில் ரூம் போட்டு உடைத்து கொண்டிருக்கின்றனர்.
சமீபமாக, இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வரும் ஆடியோ சமூக வளைதளம் கிளப்ஹவுஸ். 2020 மார்ச் அன்று வெளியான இந்த செயலி, ஆப்பிள் ஐஓஎஸ்-ல் பெரிய வரவேற்பை பெற்றதனைத் தொடர்ந்து மே 2021 முதல் ஆண்ட்ராய்டு அவதாரம் எடுத்து நம் மக்களால் நன்முறையாகவும் வன்முறையாகவும் பந்தாடப்பட்டு வருகிறது.
தனக்கென ப்ராண்டிங் சின்னம் எதுவும் வைத்துக்கொள்ளாத கிளப்ஹவுஸ் சமூக ஆர்வலர்களின் படங்களையே லோகோவில் பயன்படுத்தி வருகிறது. அத்துடன் ஒரே நபரின் புகைப்படம் மட்டும் வைத்துக்கொள்ளாமல் அடிக்கடி மாற்றி வருவதும் கிளப்ஹவுஸின் வழக்கம். அந்த வரிசையில் தற்போது கிளப்ஹவுஸ் லோகோவில் இருக்கும் ஜப்பானிய பெண் ட்ரூ கட்டோகா (Drue Kataoka).
ஜப்பானிய - அமெரிக்கரான இவர் கிளப்ஹவுஸின் ஆரம்ப கால பயனர். தற்போது 7 லட்சத்து 51ஆயிரம் ஃபாலோவர்களை கொண்டுள்ளார். அமெரிக்க அமைச்சரும், மார்ட்டின் லூதர் கிங்-ன் கடைசி மகளுமான டாக்டர்.பெர்னிஸ் கிங்குடன் இணைந்து கட்டோகா, ஆசிய மக்களின் மீதான இன வெறிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். கிளப்ஹவுஸ் உரையாடல்கள் மூலம் $100,000 டாலர்கள் நிதி திரட்ட உள்ளனர்.
Also Read: அதாவது தோழர்களே... Clubhouse மற்றும் ட்விட்டர் ஸ்பேசஸ் அலப்பறைகள்!
இதற்காக கிளப்ஹவுஸ் பயனர்கள் விரும்பினால் நிதி அளிக்கும் வசதியை செயலி உருவாக்கி தர வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இன வெறிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வரும் கட்டோகா, #StopAsianHate என்ற ஹேஷ்டேக் மூலம் அமெரிக்கர்களின் ஆசிய மக்கள் மீதான இனவெறிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார்.
டோக்கியொவில் பிறந்த இவர் சமூக ஆர்வலர் மட்டுமின்றி ஓவியரும் தொழில்நுட்ப வல்லுநரும் ஆவார். ஓவியங்களில் தொழில்நுட்பங்களைப்பயன்படுத்துவதிலும் கட்டோகா வல்லுநர். கட்டோகாவின் தந்தை ஒரு ஜப்பானியர் மற்றும் தாய் அமெரிக்கர்.
கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்பொர்ட் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர் தனக்கென கலையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஸ்டுடியோ ஒன்றை வைத்துள்ளார். கிளப் ஹவுஸ் மூலம் கலை மற்றும் சமூக மாற்றத்தையும் ஏற்படுத்த விரும்பிய கட்டோகா #24hoursLove என்னும் உரையாடல் மூலம் இன வெறியை எதிர்த்து உரையாடுகிறார். ஆர்ட் கிளப் என்னும் கிளப்பை உருவாக்கி அதன் மூலம் கலை சார்ந்த உரையாடல்களை மேற்கொள்கிறார்.
கிளப்ஹவுஸ் செயலி போன்ற சமூக வலைதளங்கள் சமூக ஆர்வலர்களை முன்னிறுத்துவது வரவேற்கத்தக்கது. இன்னும் சில வாரங்களுக்கு கட்டோகாவின் புகைப்படம் கிளப்ஹவுஸ் ஐகானை அலங்கரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
from விகடன்


No comments:
Post a Comment