சமூக வலைத்தளங்களின் சமீபத்திய வரவுகளில் முக்கியமானவை கிளப்ஹவுசும் (Clubhouse) ட்விட்டர் ஸ்பேசஸும் (Spaces). இவை கடந்த சில மாதங்களாகவே பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. பயனர்களைக் கவர்வதற்குத் தினமும் தொடர்ந்து பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன இந்த இரண்டு சேவைகளும். அந்த வகையில் ட்விட்டர் நிறுவனம் அதன் ஸ்பேசஸ் சேவையில் மானிட்டைஸ் செய்யும் வகையிலான புதிய வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
we want to help people creating cool Spaces make $$$. today, some Hosts will be able create Ticketed Spaces!
— Spaces (@TwitterSpaces) August 26, 2021
we’re experimenting on iOS only for now but we hope to get it to everyone soon. know it’s taking us a little time, but we want to get this right for you! https://t.co/xc68yWkOim
'டிக்கெட்டட் ஸ்பேசஸ்' (Ticketed Spaces) என்ற புதிய வசதியை ஸ்பேசஸ் சேவையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ட்விட்டர். இந்த வசதியின் மூலம் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளும் வகையிலான ஸ்பேசஸ் நிகழ்வுகளை ட்விட்டர் பயனர்கள் தொகுத்து வழங்க முடியும். ட்விட்டர் ஸ்பேசஸில் நடக்கும் நிகழ்வுகளில் கட்டணம் செலுத்திப் பயனர்கள் உள்நுழைந்து அந்நிகழ்வில் பங்கேற்கும் வகையில் இந்தப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் கட்டணம் செலுத்திவிட்டு திரையரங்கினுள் சென்று திரைப்படம் பார்ப்பது போன்று, கட்டணம் செலுத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட ஸ்பேசஸ் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இதன் மூலம் ட்விட்டர் பயனர்கள் வருமானம் ஈட்ட முடியும். கடந்த ஜூன் மாதம் முதலே இந்தப் புதிய வசதியைக் கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது ட்விட்டர். தற்போது இந்த வசதியை ஐஓஎஸ்(ஆப்பிள்) பயனர்களுக்கு மட்டும் வெளியிட்டிருக்கிறது.
எல்லோராலும் கட்டணம் செலுத்தும் வகையில் 'டிக்கெட்டட் ஸ்பேசஸ்' நிகழ்வைத் தொகுத்து வழங்க முடியுமா என்றால் முடியாது என்கிறது ட்விட்டர். டிக்கெட்டட் ஸ்பேசஸ் நிகழ்வு ஒன்றைத் தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அதற்கும் ஒரு குறிப்பிட்ட விதிமுறைகளை வைத்திருக்கிறது ட்விட்டர். டிக்கெட்டட் ஸ்பேசஸ் நிகழ்வை ஒரு ட்விட்டர் பயனாளர் தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அந்த டிவிட்டர் பயனருக்கு குறைந்தபட்சம் 1000 பாலோயர்கள் இருக்க வேண்டும் மற்றும் கடந்த 30 நாட்களில் 3 முறை ஸ்பேசஸ் நிகழ்வை அவர் தொகுத்து வழங்கியிருக்க வேண்டும். இதோடு அந்த ட்விட்டர் பயனருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அவருடைய ட்விட்டர் ப்ரொஃபைலில் அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவருடைய மின்னஞ்சல் கணக்கு தன்னுடையது தான் என உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அவருடைய ட்விட்டர் கணக்கு Two- Factor authentication வகையில் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறிய அனைத்து விதிமுறைகளையும் ஒரு ட்விட்டர் பயனர் பூர்த்தி செய்யும் பட்சத்தில் அவர் டிக்கெட்டட் ஸ்பேசஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கி அதன் மூலம் வருமானம் பெற முடியும்.
ஒரு ட்விட்டர் பயனர் தொகுத்து வழங்கும் டிக்கெட்டட் ஸ்பேசஸ் நிகழ்வுக்கு 1 அமெரிக்கன் டாலரில் இருந்து 999 அமெரிக்க டாலர்கள் வரை கட்டணமாக நிர்ணயித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறது ட்விட்டர். அந்தக் கட்டணத்தில் 97 சதவிகிதம் ஸ்பேசஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்குபவர் பெற்றுக் கொள்ளலாம். 3 சதவிகிதம் ட்விட்டருக்கு போகும். தற்போது ஐஓஎஸ் பயனர்களுக்கு மட்டுமே இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது எனத் தெரிவித்திருக்கும் ட்விட்டர், ஆண்ட்ராய்ட் பயனர்கள் எப்போது இந்த வசதியைப் பயன்படுத்தமுடியும் என்பது குறித்த தகவல்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
from விகடன்


No comments:
Post a Comment