நேற்று முன்தினம் (அக்.4) எதிர்பாராத விதமாக சுமார் ஆறு மணிநேரம் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான சமூக வலைத்தள சேவைகளான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முடங்கின. இது உலகம் முழுவதும் சுமார் 3.5 பில்லியன் பயனர்களை பாதித்தது. இன்று வாட்ஸ்அப் என்பது தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகப் பயன்பாட்டிற்கு வாட்ஸ்அப்பையே பிரதானமாகச் சார்ந்திருக்கின்றனர்.
இன்று நாம் பயன்படுத்தும் பெரும்பாலான இணையதள சேவைகளுக்கும் பேஸ்புக்கைப் பயன்படுத்தியே கணக்குகளைத் தொடங்கியிருப்போம். பேஸ்புக் முடங்கியபோது அதோடும் நாம் கணக்கு வைத்திருக்கும் மற்ற தளங்களையும் பயன்படுத்த முடியாத நிலை பலருக்கும் ஏற்பட்டது. இணையதளங்கள் இப்படி முடக்குவது அவ்வப்போது நிகழும் ஒன்றுதான். ஆனால், பேஸ்புக் என்ற ஒன்றை நிறுவனம் நம் தினசரி இணையப் பயன்பாட்டில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் முடங்கியது பேஸ்புக் இணையதளம் மட்டுமல்ல, பேஸ்புக் அலுவலகமும் கூடத்தான். பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் தகவல் தொடர்பிற்காகப் பயன்படுத்தும் தளங்கள், மின்னஞ்சல்களும் கூட முடங்கின.
ஏன் முடங்கியது பேஸ்புக்?
பேஸ்புக்கின் தகவல் மையங்கள் தொடர்பு கொள்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் பேஸ்புக் முடங்கியது எனத் தெரிவித்துள்ளது பேஸ்புக். பேஸ்புக் என்றால், பேஸ்புக் மட்டுமல்ல, அதனைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் தளங்கள், அதோடு பேஸ்புக் அலுவலகத்திலும் சில பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இன்னும் தெளிவாக என்ன விதமான தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது என்பதை பேஸ்புக் தெரிவிக்கவில்லை.
பேஸ்புக்கில் என்ன விதமான கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என க்ளவுட்ஃப்ளேர் (Cloudflare) நிறுவனம் அதன் வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறது. க்ளவுட்ஃப்ளேர் என்பது வலைதளக் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனம். அந்நிறுவனப் பதிவின்படி, DNS (Domain Name System) மற்றும் BGP (Border Gateway Protocol) ஆகிய அமைப்புகளில் ஏற்பட்ட கோளாறால் பேஸ்புக் சேவைகள் முடங்கியிருக்கலாம் எனத் தெரிவித்திருக்கிறது க்ளவுட்ஃப்ளேர்.
DNS என்பது ஒரு வலைத்தளத்துக்கான முகவரி (Facebook.com போன்று). BGP என்பது அந்த முகவரியை நாம் அடைவதற்கான வழிகாட்டி. பேஸ்புக்கின் தகவல் மையங்களில் ஏற்பட்ட கோளாறால் பேஸ்புக்கின் DNS சர்வர்களிலும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. DNS சர்வர்களில் ஏற்பட்ட குழப்பத்தால் BGP-யால் பேஸ்புக் தளத்திற்குச் செல்வதற்கான சரியான வழியைக் கூற முடியவில்லை. இதனால்தான் பேஸ்புக் மற்றும் அது தொடர்பான சேவைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
Also Read: வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என தடைபட்ட சேவைகள்... ஓர் இரவில் சரிந்த மார்க்கின் சொத்துமதிப்பு!
பேஸ்புக் தங்களுக்குள் நடக்கும் தகவல் பரிமாற்றங்களுக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளைத்தான் பயன்படுத்தி வந்திருக்கிறது. அந்தச் சேவைகளும் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் உடனடியாக இந்தக் கோளாறை பேஸ்புக்கால் சரிசெய்ய முடியவில்லை. இந்த முடக்கம் குறித்த எந்தவொரு தெளிவான தகவல்களையும் பேஸ்புக் பகிர்ந்து கொள்ளவில்லை. பேஸ்புக்கின் இந்த முடக்கம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகானத்தில் அமைந்திருக்கும் சான்டா கிளாராவில் உள்ள சர்வர்களில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் நிகழ்ந்திருக்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியன. இந்தக் கோளாறை நேரடியாக சான்டா கிளாராவிற்கே சென்று சரிசெய்திருக்கிறது பேஸ்புக்.
To the huge community of people and businesses around the world who depend on us: we're sorry. We’ve been working hard to restore access to our apps and services and are happy to report they are coming back online now. Thank you for bearing with us.
— Facebook Engineering (@fb_engineering) October 4, 2021
இணையத்தில் எந்தவொரு தளம் முடங்கினாலும் பயனர்கள் சென்று சேரும் இடம் ட்விட்டர்தான். நேற்றும் பேஸ்புக் முடங்கியவுடன் தங்களுக்கு மட்டும்தான் இது நிகழ்ந்திருக்கிறதா எனத் தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் ட்விட்டருக்குப் படையெடுத்தனர் பயனர்கள். மேலும் வாட்ஸ்அப் முடங்கியதால் தகவல் பரிமாற்றத்திற்கு டெலிகிராமிற்குப் படையெடுத்தனர். திடீரென அதிக அளவிலான பயனர்கள் டெலிகிராமைப் பயன்படுத்தியதால் டெலிகிராமும் சிறிது நேரம் தடுமாறியது.
from விகடன்


No comments:
Post a Comment