நாம் மிகவும் விரும்பிய ஒரு வாய்ப்பு கைக்கெட்டும் தூரத்தில் வந்து பின்னர் நழுவிச் சென்று, மீண்டும் நம் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் அது நம் கைகளில் கிடைத்தால் எப்படி இருக்கும்? வாலி ஃபங்கிற்கு (Wally Funk) அப்படி ஒரு வாய்ப்புதான் கிட்டியிருக்கிறது.
1961-ல் விண்வெளிக்குப் பெண்களை அனுப்பும் திட்டம் ஒன்றை வைத்திருந்தது நாசா. இதற்காக 13 பெண்களைத் தேர்வும் செய்தது. இந்த 13 பெண்கள் கொண்ட அணிதான் 'Mercury 13' என்றழைக்கப்படுகின்றனர். அந்த 13 பெண்கள் கொண்ட அணியில் வாலியும் ஒருவர். இந்தத் திட்டத்திற்கு வாலியைத் தேர்வு செய்தபோது அவரது வயது 21. அனைத்து விதமான தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றும், அமெரிக்காவின் எந்த விண்வெளித் திட்டத்திலும் இந்தப் 13 பெண்களில் ஒருவர் கூட விண்வெளிக்குச் செல்லவில்லை.
விண்வெளிச் சுற்றுலா என்ற திட்டத்தை முன்வைத்து அமேஸான் நிறுவனரான ஜெஃப் பஸாஸின் (Jeff Bezos) ப்ளூ ஆரிஜின் (Blue Origin) நிறுவனமும், ரிச்சர்ட் பிராண்ஸனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் கடுமையான போட்டிப் போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த மாதம் 20-ஆம் தேதி ஜெஃப் பஸாஸின் பளூ ஆரிஜின் நிறுவனம் பயணியர்களுடன் கூடிய முதல் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயணத்தில் ஜெஃப் பஸாஸ், அவரது சகோதரர் மார்க் பஸாஸ் ஆகியோருடன் வாலியும் பயணிக்கவிருக்கிறார். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகுத் தன் கனவை நனவாக்க இருக்கிறார் வாலி. இந்தப் பயணத்தில் ஜெஃப், மார்க் மற்றும் வாலியுடன் மற்றொரு நபரும் பயணிக்கிறார். ப்ளூ ஆரிஜினின் இந்த முதல் விண்வெளிப் பயணத்தில் இவர்களுடன் பயணிப்பதற்கான வாய்ப்பு ஏலம் விடப்பட்டது. அந்த ஏலத்தில் வெற்றி பெற்றவர்தான் இந்த நான்காம் நபராக இவர்களுடன் பயணிக்க இருக்கிறார். ஆனால், அந்த நபர் யார் என இதுவரை அறிவிக்கப்படவில்லை.
வாலி, பஸாஸுடன் இந்த விண்வெளிப் பயணத்தில் பயணிக்கவிருப்பது குறித்த இன்ஸ்டாகிராமில் பஸாஸ் பதிவிட்டிருக்கிறார். அதில், வாலியை சிறப்பு விருந்தினர் எனக் குறிப்பிட்டிருக்கிறார் பஸாஸ். இந்தப் பயணத்திற்காக நியூ ஷெப்பர்ட் (New Shepard) எனப் பெயரிடப்பட்ட விண்கலம் பயன்படுத்தப்படவிருக்கிறது. இதுவரை பல முறை சோதனை ஓட்டத்தை மனிதர்கள் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது நியூ ஷெப்பர்ட் விண்கலம். இந்த விண்கலத்தின் மூலம் மணிக்கு 2,300 மைல் வேகத்தில் விண்ணுக்குச் செல்லும், எரிபொருள் தீர்ந்தவுடன் விண்கலத்தில் இருந்து பயணியர் பயணிக்கும் பகுதி மட்டும் தனியாகப் பிரிந்து மேலே செல்லும், குறிப்பிட்ட தூரத்தை அடைந்தவுடன் மீண்டும் பூமியில் அந்த பகுதி விழும் வகையில் இந்த விண்வெளிப் பயணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 100 கிலோமீட்டர் உயரத்தை அடைந்து பின் மீண்டும் பூமிக்குத் திரும்பும் இந்தக் குழு. இந்த உட்சபட்ச உயரத்தை அடையும் நேரத்தில் சில நிமிடங்கள் மட்டும் எடையற்ற தன்மையைப் பயணிகள் உணர முடியும். மீண்டும் பூமியில் விழும் பகுதியின் வேகத்தைக் குறைப்பதற்கு பாராசூட்கள் பயன்படுத்தப்படும்.
பஸாஸின் விண்வெளிப் பயணத்தில் வாலியும் இடம்பெறுகிறார் என பஸாஸ் அறிவித்த சில மணி நேரத்திலேயே விர்ஜின் கேலக்டிக் நிறுவனமும் இந்த மாதம் 11-ஆம் தேதி விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அதன் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன் அறிவித்திருக்கிறார். விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்வெளிப் பயணத்திலும் பயணிக்க வாலி பதிவுசெய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விண்வெளிப் பயணத்தில் பிராண்சன் மற்றும் இரண்டு பைலட்டுகள் உட்பட ஆறு பேர் பயணிக்கவிருக்கிறார்கள். இந்தப் பயணத்தை முழுவதுமாக நேரலை செய்யத் திட்டமிட்டிருக்கிறது விர்ஜின் கேலக்டிக். ப்ளூ ஆரிஜின் நிறுவனமும் நேரலை செய்யத் திட்டமிட்டுள்ளது.
Also Read: IN-SPACe: உதயமாகிறது இந்தியாவின் புதிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு!
இரண்டு நிறுவனங்களும் பயணிகளை விண்வெளிச் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல போட்டியிட்டு வரும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் பயணியர் விண்வெளிச் சுற்றுலாவைத் தொடங்கும் என்று தெரிகிறது. ஆனால், பஸாஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் எப்போது மற்ற பயணிகளை அழைத்துச் செல்லும் என்பது பற்றியோ, அதன் விலை எவ்வளவு இருக்கும் என்பது பற்றியோ எந்தத் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. தற்போது பஸாஸுடன் பயணிக்கவிருக்கும் நபர் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுத்து ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் விண்வெளிப் பயணத்திற்கான ஏலத்தை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
from விகடன்


No comments:
Post a Comment